செய்யாறில் ‘நன்னூல் சொல்லதிகாரம் – டி.என்.பி.எஸ்.சி., பொது அறிவு’ நூல்கள் வெளியீட்டு விழா : நூல் ஆசிரியர் க.ஆறுமுகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது !செய்யாறு, ஆக. 3 -செய்யாறில் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் ஒருங்கிணைப்பில், அறம் பதிப்பகத்தின் சார்பில் பேராசிரியர் முனைவர் க.ஆறுமுகம் எழுதிய “நன்னூல் – சொல்லதிகாரம்” மற்றும் ( டி.என்.பிஎஸ்.சி.,) பொது அறிவு” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா மற்றும் திறனாய்வுக் கூட்டம் செய்யாறு ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் மாவட்டச் செயலாளர் இடிமின்னல் இனியவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நா.சொக்கலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்சி.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செய்யாறு கலைக் கல்லூரி, இணைப் பேராசிரியர் முனைவர் தேவி வரவேற்றார்.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆர்.பாபு ஜனார்த்தனம் நூல்களை வெளியிட, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ந.கலைவாணி பெற்றுக் கொண்டார்.தமிழ் இலக்கியம், இலக்கணம் மற்றும் போட்டித் தேர்வுக் கல்வி ஆகியவை ஒரே மேடையில் இணைத்த அரிய நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வு அமர்வில் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் த.சுப்பிரமணியன், ( டி.என்.பி.எஸ்.சி., )பொது அறிவு” நூல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடப்பகுதிகளை வினா – விடை வடிவில் தொகுத்திருப்பது போட்டித் தேர்வர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும், குறுகிய கால மீள்பார்வைக்கு ஏற்ற சிறந்த கையேடாக இந்நூல் அமைந்துள்ளதாகவும் பாராட்டி பேசினார்.தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கு.சீனிவாசன், “நன்னூல் – சொல்லதிகாரம்” நூல் பாரம்பரிய தமிழ் இலக்கண மரபை எளிய நடையில் இன்றைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, நன்னூலின் ஆறு இயல்களையும் திட்டமிட்ட முறையில் விளக்கும் சிறந்த துணை நூலாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.எழுத்தாளர் மைத்திரி அன்பு பேசுகையில், பேராசிரியர் க.ஆறுமுகம் பல ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியராகவும், போட்டித் தேர்வுப் பயிற்றுநராகவும் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாகவே ( டி.என்.பி.எஸ்.சி., ) பொது அறிவு நூல் உருவாகியுள்ளதாகவும், போட்டித் தேர்வர்களுக்கு இந்நூல் பயனுள்ள வழிகாட்டியாக அமையும் என்றும் தெரிவித்தார். மேலும், “பவணந்தி முனிவரின் நன்னூல் – சொல்லதிகாரம்” நூல் தமிழ் இலக்கண மரபை எளிமையாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக அமைந்துள்ளதுடன், தமிழ் இலக்கண ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த துணை நூலாக விளங்கும் என்றும் பாராட்டி பேசினார்.அதேவேளையில், எதிர்கால பதிப்புகளில் மொழித் துல்லியம், பதிப்புத் தரம் மற்றும் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் நூல்களின் செம்மை மேலும் உயரும் என்றும், சமூகப் பொறுப்புணர்வுள்ள நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அறம் பதிப்பகத்தின் பணி பாராட்டுக்குரியது. அதன் எதிர்கால வெளியீடுகள் உள்ளடக்கத்திலும் பதிப்பு நேர்த்தியிலும் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் பதிவு செய்தார்.அவரைத் தொடர்ந்து, வாழ்த்துரையாற்றிய அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனி.தனஞ்செழியன், தமிழ் ஆசிரியர்கள் கண்ணன், செல்வி, இளையராஜா ஆகியோர் நூல்களின் சிறப்புகளையும், மேம்படுத்துவதற்கான சில கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்.விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளர் உதயகுமார், செய்யாறு ஆர்.சி.எம். சர்ச் பங்குத்தந்தை சுதர்சனம், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் செய்யாறு வட்டத் தலைவர் வ.திருவாசகம், பொருளாளர் சத்தியமூர்த்தி, செய்யாறு பிம்பிசாரர் புத்தவிகார் நிறுவனர் பெளத்த உபாசகர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்யாறு நகரச் செயலாளர் அ.லோகு, ஆவணக் காப்பகத்தின் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழரசன், நிர்வாகிகள் பெருங்கட்டூர் சந்தோஷ், பராசூர் மணிகண்டன், ஐயப்பன், ந.சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.