பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள விஏஓ மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?வேலூர், ஜூலை 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார் இளங்கோ. இவர் பத்து ரூபாய் வட்டிக்கு ஆசைப்பட்டு பல கோடியை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் ஏன் சக கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் இந்த தகவல் தெரிந்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இவர் மீது துறை ரீதியாக எடுக்கவில்லை. எந்த விசாரணையும் செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சந்தேகத்துடன் பேசி வருகிறார்கள். இதைப் பற்றி யாராவது பொதுமக்கள் சென்று கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவிடம் நேரில் கேட்டால் போதும் நான் காவல்துறையில் பணிபுரிந்தவன். என்னை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று மார்தட்டி கொண்டு தைரியமாக உலா வருகிறார். இவ்வளவு நாள் தாமதம் செய்தது போதும். மாவட்ட நிர்வாகம் வீறுகொண்டு எழுந்து விஏஓ இளங்கோ மீது அந்த பல கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்று உரிய விசாரணை செய்யுமா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். விசாரணை யில் அது உண்மை என்று தெரியவந்தால் இளங்கோவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.