வட மாநில தொழிலாளர் போராட்ட நிதியாக ரூ.15 லட்சம் வழங்கிய சிஐடியு தமிழ் மாநிலக் குழு

ஊட்டி,
இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு) அகில இந்திய அமைப்பின் முடிவின்படி, வட மாநிலங்களில் நடைபெற்று வரும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவாக சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ரூ.15 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற சிஐடியு மாநிலக் குழுக் கூட்டத்தின் போது, சிஐடியு தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தர்ராஜன் அவர்களிடம் ரூ.15 லட்சத்திற்கான நிதியை வழங்கினார்.
இந்த நிகழ்வில் சிஐடியு மாநிலத் தலைவர் ஜி. சுகுமாரன், மாநில பொருளாளர் எஸ். ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் கோபிகுமார், சந்திரன் உள்ளிட்ட மாநிலக் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வட மாநிலங்களில் தொழிலாளர்களின் உரிமைகள், வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டதாக சிஐடியு தலைவர்கள் தெரிவித்தனர்.
மேலும், நாடு முழுவதும் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பாதுகாக்கவும் சிஐடியு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், தொழிலாளர் ஒற்றுமையே அவர்களின் மிகப்பெரிய பலம் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.