தவறு செய்யும் விஏஓக்கள் மீது நடவடிக்கை எடுக்காத கோட்டாட்சியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படுமா?வேலூர், ஜூன் 9-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும்10 லிருந்து 15 ஆண்டுகளாக ஒரே வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களை வேறு வட்டத்திற்கு மாற்றாமல் ஆங்காங்கே பணியாற்றி வருகின்றனர். ஆதலால் பழைய கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து விட்டு புதியதாக காட்பாடி வட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பேசி வருகின்றனர். சுமார் 10 முதல்15 ஆண்டுகளாக ஒரே வட்டத்தில் பணி செய்து வருவதால் சில கிராம நிர்வாக அலுவலர்கள் பல முறைகேடுகளில் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. அதற்காகத்தான் ஒரே வட்டத்தில் விஏஓக்கள் பணி செய்வதாகவும், வெளிவட்டத்திலிருந்து புதிய கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தால் பல முறைகேடுகள் வெளிவரும் என்ற அச்சத்தால் தான் இதே வட்டத்திற்குள் பணி செய்து வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவலும் பரவி வருகிறது. அதேபோல் காட்பாடிக்கு வரும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், மண்டல வட்டாட்சியர்கள் ஆகியோரும் காட்பாடிக்கு வருவதற்கு அச்சப்படுகிறார்கள். காட்பாடி வட்டத்திற்குள் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்திற்குள் யாரும் தங்குவதில்லையாம். அலுவலக வேலை நேரத்திற்கு எந்த விஏஓக்களும் அலுவலகத்திற்கு செல்வதும் இல்லையாம். இதனை யாரும் தட்டி கேட்பதும் இல்லாமல் உள்ளது. அலுவலகத்திற்கு 12 மணிக்கும், ஒரு மணிக்கும் செல்வதும் வழக்கமாம். அப்படி இல்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு பணி செய்து வருகிறார் களாம். இவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சங்க அலுவலகம் வைத்து கொள்ள அனுமதி அளித்தது யார்?. இது அரசு அலுவலகமா? அல்லது சங்க அலுவலகமா? . ஒரு மணி நேரம் கூட அந்தந்த விஏஓக்கள் பணியமர்த்தப்பட்ட அலுவலகத்தில் உட்கார்ந்து வேலையை பார்ப்பது இல்லை. பொதுமக்கள் இவர்களது வருகைக்கு தவமாய் தவம் கிடக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதே போல் பட்டா மாற்றம் , இடத்தை அளந்து கொடுக்க சுமார் ரூ. 10,000 லிருந்து ரூ. 20 ஆயிரம் வரைக்கும் லஞ்சம் (கையூட்டு) பெறுவதாக ஒரு அதிர்ச்சி தகவலும் உலா வருகிறது. இவர்கள் செய்யும் முறைகேடுகள், எவ்வளவு லஞ்சம் பெறுகிறார்கள் என்று வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் நன்கு தெரியுமாம். அதேபோல் காட்பாடி வட்டத்துக்குள் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது பல புகார்கள் சென்றாலும் வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லையாம். வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் …? என்ன காரணம்? என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்திற்குள் பணிபுரியும் விஏஓக்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் வெளிவட்டத்திற்கு மாற்றப்படுவார்களா.? இல்லை மௌனம் காத்து முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை போவார்களா உயரதிகாரிகள்.? என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். விஏஓக்கள் செய்யும் தவறுகளுக்கு துணை போகும் கோட்டாட்சியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வருவாய் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு, வேலூர் மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.