யுகாதி திருநாளை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!

வேலூர், மார்ச் 20-
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் 19 .3.2026 வியாழக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு பஞ்சாங்கம் வாசித்தல் மற்றும் பிரம்மோற்சவம் தொடர்பான பத்திரிகையை வாசித்தல் ஆகிய அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ வரதராஜ பெருமாளை யுகாதி பண்டிகையையொட்டி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த திருமஞ்சனம் மற்றும் பூஜைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அசோகன் செய்திருந்தார்.