வேலூர்,மார்ச் 20-
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டம், பசுமாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 412-1 ல் உள்ள மந்தைவெளி புறம்போக்கு நிலத்தை பசுமாத்தூர் கிராமத்தில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது பங்காளிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவருகிறது. அவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஜெயந்தன் என்பவரால் கடந்த 18.06.2024 அன்று புகார் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது . கடந்த 08.01.2025 அன்று சென்னை உயர் நீதிமன்றம் புகார்தாரர் குறிப்பிடும் இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் அதனை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்தது. அதன்படி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி விசாரித்து பசுமாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 412-1 ல் ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்து அதனை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீஸையும் மதிக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் சிமெண்ட் தரை போட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஒரு வருடம் கடந்த பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றாத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த 07.01.2026 அன்று தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 27.03.2026 அன்று தெரிவிக்க கூறியிருந்த நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் தற்போது கட்டுமான பணிகளை செய்ய கட்டுமான பொருட்களை இறக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் அதனை பற்றி ஏதும் கண்டுகொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதோடு ஆக்கிரமிப்பாளர்களுடன் நேரடியாக கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். ஆக்ரமைப்பாளர்களுக்கு ஆசி வழங்கும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் எதிர்பார்க்கிறார். இனி என்ன நடவடிக்கையை அரசு எடுக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.













Leave a Reply