கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.


மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள், பல ஆண்டுகளாக அரசிடம் இலவச வீட்டு மனை கோரி விண்ணப்பித்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில், தங்களது நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பாஷா, தலைமை தாங்கினார் சிஐடியு மாநில செயலாளர் எஸ் கிருஷ்ணமூர்த்தி போராட்டத்தை துவக்கி வைத்தார்
சங்க நிர்வாகிகள்
சாமுவேல், முகமது அலி, ஜின்னா, ஷானவாஸ், சத்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் இந்த
போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
போராட்டம் தீவிரமடையும் சூழ்நிலை காணப்பட்டதால், மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலும், காவல் ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையிலும் உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன். சரத்குமார். சிறப்பு பிரிவு தலைமை காவலர்கள் திருமதி கண்ணன் ரஞ்சித் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
காலம் நகர நகர போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் கவிதா மற்றும் தலைமையிடத்து வட்டாட்சியர் ரேவதி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், “இதற்கு முன்பும் பலமுறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதிமொழி அளித்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ள இடங்களையும் காட்டியுள்ளனர். ஆனால் இதுவரை ஒரு குடும்பத்திற்குக் கூட வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. ஏழை தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்” என்று தங்களது வேதனையை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அதிகாரிகள், “சில தினங்களுக்குள் தகுதியான அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, உரிய ஆய்வு நடத்தி, தகுதியானவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதிமொழி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், “பல ஆண்டுகளாக வீட்டு மனை கேட்டு போராடி வருகிறோம். தேர்தலுக்கு முன்பாகவே வீட்டு மனை ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம். மேலும், வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையத்திற்கு திருப்பி அனுப்புவது, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது, தேவையானால் மயானங்களில் குடியேறும் போராட்டம் நடத்துவது போன்ற தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.
போராட்டத்திற்கு வந்திருந்த மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அதன் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் இன்று முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் , கனகமணி, குணசேகரன், மகாலிங்கம், ஹபிபுல்லா, பஷீர் பார்த்தசாரதி, சதாம் உசேன், நாகலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.










Leave a Reply