வேலூர் 3வது மண்டலத்தில் புத்தம் புதிய வீல் சேர்கள் பராமரிப்பின்றி அழியும் அவலம்!

வேலூர்,மார்ச் 13-
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்டது 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் 4 மண்டல குழு தலைவர்களும் நியமிக்கப்பட்டு வேலூர் மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் வேலூர் 3வது மண்டலத்தில் குறிப்பாக மண்டல குழு தலைவர் யூசுப்கான் அலுவலகம் அமைந்துள்ள பழைய மாநகராட்சி கட்டடத்தில் அவரது இருக்கையின் அருகிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய இருசக்கர வீல் சேர் வண்டிகள் பாழடைந்த தூசு படிந்த அறையில் அடைக்கப்பட்டு பராமரிப்பின்றி அழியும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனை தொடர்புடைய மாநகராட்சி நிர்வாக அலுவலர்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஆவண செய்யாமல் அலட்சியப் போக்கில் செயல்படுகின்றனர் என்பது இதில் நிதர்சன உண்மை. ஆக மொத்தத்தில் அரசின் பணம், மக்கள் பணம் ,மக்கள் வரியாக அரசுக்கு செலுத்திய பணம் இவ்வாறு அழிவதை பார்க்க மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது .அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பலருக்கு இல்லை என்று சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் பொதுமக்களும் கூறி நெஞ்சம் குமுறுகின்றனர். சிலர் இந்த புகைப்படங்களை சேகரித்து இணையதளத்தில் உலாவரச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அப்படி செய்தும் இதுநாள் வரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருவது ஏனோ என்று தெரியவில்லை. வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம். சுனில்குமார் ஆகியோர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு இந்த இருசக்கர வீல் சேர்கள் யாருக்கு பயன்படுகிறதோ அந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதுபோன்று ஒன்றுக்கும் உதவாத நிலையில் செயல்படும், இருந்தும் இல்லாத நிலையை உருவாக்கும் 3வது மண்டல தலைவரையும் உடனடியாக மாற்றி அமைக்க சட்டத்தில் என்ன வழி வகைகள் செய்ய வேண்டுமோ அதை விரைந்து செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.