குடியாத்தம் தனி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்த கிறிஸ்தவ பாதிரியார்: அதிமுகவினர் கொதிப்பு- தலைமைக்கு புகார்!

வேலூர், மார்ச் 8-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி எம்எல்ஏ தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள ஜி.பரிதா, பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மசிகம் கிராமத்தில் என்.டி.சி.   கண்மலை திருச்சபையின் தலைவராக இருப்பதாகவும், கிறிஸ்தவ பாதிரியாரை எப்படி தனித்தொகுதியில் நிறுத்துவது என்றும் அதிமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். இதோடு, அவர் 2021-ம் ஆண்டு தேர்தலில் பரிதா போட்டியிட்டபோது, அவர் தனது பெயரில் உள்ள திருச்சபையின் இடத்தை வேட்புமனு தாக்கலின்போது, படிவம் 24-இல் அந்த இடத்தை மறைத்திருப்பதும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சர்ச்சைக்கு இன்றுவரை தெளிவான விளக்கம் மற்றும் பதில் அளிக்க முடியாமல் பரிதா மறைந்து கொண்டுள்ளார்.
குடியாத்தம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 2021 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஜி.பரிதா, 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்ட கஸ்பா ஆர்.மூர்த்தி, அதிமுக வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.கோவிந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன், பேரணாம்பட்டு முன்னாள் சேர்மன் வக்கீல் வாசுகி பாண்டியன், கல்வியாளர் கேப்டன் பிரசாத்குமார், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்குமார், நகராட்சி கவுன்சிலர் கற்பகம் மூர்த்தி உட்பட பலரும் முயற்சித்து வருகின்றனர். 
இந்த நிலையில், பரிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அதிமுக தலைமைக்கு அதிமுகவினர் புகார்களை அனுப்பி வருகின்றனர். இவர் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மசிகம் கிராமத்தில் என்.டி.சி.கண்மலை திருச்சபை- ஆரோன் திருச்சபைகளின் தலைவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார் என்ற தகவலை அதிமுகவினர் புகாராக அனுப்பியுள்ளனர்.
2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-இல் மசிகம் கிராமத்தில் உள்ள சின்னதாமல் செருவு கிராமத்தில் உள்ள நிலத்துண்டு 207-63-இல் 812 சதுர அடி நிலத்தை இமானுவேல் திருச்சபையின் போதகர் எல்.சம்பத்திடம் ரூ.70 ஆயிரத்துக்கு வாங்கி, பேரணாம்பட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்திருக்கும் ஆவணத்தையும் அதிமுகவினர் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த இடம் பரிதாவின் பெயருக்கு வருவாய்த் துறை ஆவணங்களிலும் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதை அவர் 2021-ஆம் ஆண்டு தேர்தலின்போது, போட்டியிட்டபோது இந்த சொத்தை அவர் மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். வேட்பு மனுவின்போது இணைக்க வேண்டிய படிவம் 24-இல் அவர் தனக்கு எந்த விதமான சொத்தும் இல்லை என்று பரிதா குறிப்பிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் கிறிஸ்தவ மதத்துக்கு மத மாற்றம் அடைந்திருந்தால், அவர்கள் பி.சி. பிரிவில் இடம்பெறுவர். ஆனால், பரிதா தான் கிறிஸ்தவராக இருந்தும், ஆதிதிராவிடருக்கான சலுகையை அனுபவித்து வருவதோடு, தேர்தலில் போட்டியிட்டு தவறுகளை செய்கிறார் என்றும் சர்ச் சொத்தையும் வேட்புமனுவில் மறைத்துள்ளார் என்றும் அதிமுக தலைமைக்கு அதிமுகவினர் புகார் அனுப்பி வருகின்றனர். இதுதவிர, பரிதாவின் கணவர் புருஷோத்தமன் அரசு துறையான ஹைவேஸ் துறையில் ஏ.டி.யாக இருப்பவர். அவர் பி.சி. வகுப்பை சேர்ந்தவர். இவர்கள் இருவருமே பி.சி.யாக இருக்கும்போது, எஸ்.சி. தனி தொகுதியில் வேட்பாளராக்க கூடாது என்று அதிமுகவினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் இ.பி.எஸ். அவர்களும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியும், மாவட்ட கழக செயலாளர் டி.வேலழகனும் தலையிட்டு, உண்மையான தகுதியான வேட்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் பரிதா வேட்பாளராக தகுதியற்றவர் என்ற சாட்சியம் இதை விட ஆவணங்கள் வேறு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டது. ஆதலால் இவர் குடியாத்தம் தனித் தொகுதியில் போட்டியிட தகுதி இழப்பு பெற்றிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது. இதற்குப் பிறகும் அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.