மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த சி.ஐ.டி.யு பொதுத் தொழிலாளர் சங்கம் முடிவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சி.ஐ.டி.யு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சங்கத் தலைவர் எம்.எச். சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பாஷா முகமது அலி ஜின்னா, சானவாஸ், சாமுவேல், அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு மேலிட அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு மாநில செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் பி. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தினார்கள் கூட்டத்தில் மத்திய மற்றும் மாநிலக் குழுக்களின் அரசியல் மற்றும் அமைப்பு அறிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்கள் நலன் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் சமூகப் போராளி நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கும், அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த ஈரான் உச்சத் தலைவரின் குடும்பத்தினருக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

  1. வீட்டுமனை கோரி போராட்டம்
    மேட்டுப்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக வீட்டு மனைக்காக விண்ணப்பித்தும் இதுவரை நிலம் வழங்கப்படாத ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு உடனடியாக வீட்டு மனை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் வகையிலான தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  2. பவானி ஆற்றை பாதுகாக்க நடவடிக்கை கோரி
    மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவசாயிகளின் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்து வரும் பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கடுமையாக கண்டித்தும், பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும் என்றும், பவானி ஆற்றில் வெள்ளநீர் ஓட்டத்தை சீராக விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களின் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டங்கள் நடத்தவும், தேவையானால் நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்யப்பட்டது.
  3. ரயில்வே சேவை மேம்படுத்த கோரி போராட்டம்
    மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் மெமோ ரயிலில் தினமும் கடும் கூட்ட நெரிசல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்க பலமுறை கோரிக்கை வைத்தும், ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னரும் ரயில்வே நிர்வாகம் அறிவித்தபடி கூடுதல் பெட்டிகள் இணைக்கவில்லை. இந்த அலட்சியத்தையும், கூடுதல் ரயில் சேவைகள் அறிவிக்காததையும் கண்டித்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  4. பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரி
    மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் கூடும் நிலையில் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகள் செயல்படுவது சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கிறது. பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அந்த மதுக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தி தொடர் மக்கள் திரள் அரசு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
  5. தொழிலாளர் நல வாரிய அலுவலகம் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் செயல்பட வேண்டும்
    தொழிலாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சிறிய தேவைகளுக்குக் கூட கோவைக்கு செல்ல வேண்டிய சிரமத்தை தவிர்க்க மேட்டுப்பாளையத்திலேயே தொழிலாளர் நல வாரிய அலுவலகம் பழையபடி மீண்டும் செயல்பட அரசிடம் தொடர் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது.
  6. வேழம் இயலியல் பூங்காவை திறக்க கோரி
    மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக யானை மனித மோதலை தவிர்ப்பதற்காகவும் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட வேழம் இயலியல் பூங்காவை உடனடியாக திறக்க கோரி போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், மேட்டுப்பாளையம் – காரமடை சாலையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு செயல்பட்டு வரும் தனியார் வங்கி, பொதுத்துறை நிறுவனங்களை மறைக்கும் வகையில் விளம்பர பதாகைகள் அமைத்திருப்பதை கூட்டம் கடுமையாக கண்டித்தது. பொதுத்துறை நிறுவனங்களின் மரியாதையை குறைக்கும் இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்தி அந்த விளம்பர பலகைகளை அகற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும், தேவையானால் சம்பந்தப்பட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற முழுமையான தேர்தல் பணிகளில் ஈடுபடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் காளீஸ்வரன், ஹபீபுல்லா, பஷீர், கனகாமணி, ரங்கநாதன், குணா சேகர், ஆனந்தி, சதாம் உசேன், சன்பீர், சுப்பு யாசர், அப்துல் காதர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.