வேலூர் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில்எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் விழா!

வேலூர், மார்ச் 3-
தமிழ் திரைப்பட உலகில் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூர் வீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் முதல் திரைப்பட நட்சத்திரம் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க தலைவர் சி.தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எல்.பன்னீர்செல்வம், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநகர தலைவர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார் .அப்போது அவர் கூறியதாவது: எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆங்கிலேய அரசுக்காக பல நிதிக்கொடை நிகழ்ச்சிகளை நடத்தினார். போருக்கு நன்கொடையும் அளித்தார். அதன்பொருட்டு அவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்க பிரிட்டிஷ் அரசு விரும்பியதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் அவருடைய வரலாற்றாசிரியர் சிலர் கூறுகின்றனர். பலுசிஸ்தானின் குவெட்டா நகரில் நிகழ்ந்த பூகம்பத்தில் முப்பதாயிரம் பேர் மறைந்தபோது ஒரு தனிமனிதர் தமிழகத்தில் அளித்த மிகப்பெரிய நன்கொடை எம்.கே.தியாகராஜ பாகவதர் அளித்ததுதான் என அவருடைய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடர்ச்சியாக அறக்கொடைகளுக்கான இசை நிகழ்ச்சிகளை எம்.கே.தியாகராஜ பாகவதர் நடத்திக் கொண்டிருந்தார். ராமலிங்க சுவாமிகள் மடம், திருப்பத்தூர் பள்ளி ஆகியவற்றுக்காக அவர் அளித்த நிதிக்கொடைகள் பதிவாகியிருக்கின்றன. தன்னுடைய இசையாசிரியர்களை கௌரவிக்கும் பொருட்டும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்து அளித்திருக்கிறார். தமிழிசை இயக்கத்துக்கும் பெரும் தொகைகளை அளித்தார். எம்.கே.டி.மனித நேயம், தயாள குணம் கொண்டவர், மற்றவர்களின் உதவியை விரும்பாதவர். வாழ்க்கையின் நெருக்கடிகளை கம்பீரமாக எதிர்கொண்டவர். பாகவதர்’என்ற சொல்லுக்கு இசைப்புலவர் என்ற பொதுவான அர்த்தம் இருந்தாலும் உலக தமிழர் மத்தியில் அச்சொல் தியாகராஜ பாகவதர் என்றே அறியப்படுகிறது. திரையுலக புகழிலும் கர்நாடக இசையில் முதலிடத்தில் இருந்த எம்.கே.டி.யின் பிறப்பும், இறப்பும் கூட முதலிடத்தில்தான் அமைந்துள்ளது. 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி பிறந்த தியாகராஜர் 1959ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் தேதி மறைந்துள்ளார்.
பின்னர் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் எழுப்பி திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.  அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் ஆச்சாரி,  தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநகர செயலாளர் எஸ்.அச்சுதன், இளைஞர் அணி செயலாளர் எஸ்.கார்த்திகேயன் ஆச்சாரி, இணை செயலாளர் எஸ்.ராஜி ஆச்சாரி, நமச்சிவாயம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  
முடிவில் எல்.திருநாவுக்கரசு நன்றி கூறினார்.