செய்யாறு, பிப். 20 –
‘பஞ்சமி நிலங்களை’ மீட்டு தரக்கோரி செய்யாறில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ‘எச்சில்’ துப்பும் மண் சட்டியை கழுத்தில் தொங்க விட்டப்படி, தாலுகா அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தலித் இன மக்கள் பசியின்றி சாப்பிட வேண்டும், இவர்களது வாழ்வாதாரத்தை சற்று உயர்த்த வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில், இவர்களுக்கு ‘பஞ்சமி நிலங்களை ஒதுக்கி. கொடுத்தனர். இந்த நிலங்களை மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் வாங்க கூடாது. அப்படியே வாங்கினாலும் செல்லாது என்ற சட்டத்தையும் கொண்டு வந்தனர். இதற்கான முழு விபரங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் இன்றும் பதிவேட்டில் இருந்து வருகிறது.
ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ‘பஞ்சமி நிலங்கள் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களின் பிடியில் தான் சிக்கி உள்ளது. இந்த நிலங்களை முறைப்படியாக சம்பந்தப் பட்டவர்களுக்கு மீட்டு தர வேண்டும் என, தலித் இன மக்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதற்கான மனுக்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளனர்.
ஆனால், அரசு அதிகாரிகள் இது பற்றி கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். பெரும்பாலான அதிகாரிகள் ‘சாக்கு போக்கு சொல்லி’ மனுக்களை ‘குப்பையில்’ சத்தமில்லாமல் வீசிவிட்டு மாறுதலாகிச் சென்று விடுகின்றனர். இவைகளை கண்டிக்கும் வகையிலும், இதுதவிர மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ‘கல் குவாரிகளை’ இழுத்து மூட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் இந்த இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் அ.லோகு, ஒன்றிய செயலாளர் கோபிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவாரா கண்டன
உரையாற்றினார். பொறுப்பாளர்கள் செல்வம்,
செல்வப்பாண்டியன், நன்மாறன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு, வருவாய்த் துறையினரை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.











Leave a Reply