வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஓடும் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் மலைக்கிராமப் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் நலமுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை மலைப்பகுதிக்குட்பட்ட முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு (28). கூலித் தொழிலாளியான இவருடைய மனைவி பிரியா (22). நிறைமாத கர்ப்பிணியான பிரியா, தனது மூன்றாவது பிரசவத்திற்காக ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று இரவு சுமார் 7.57 மணியளவில் பிரியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது பணிக்குடம் உடைந்து நீர் வெளியேறத் தொடங்கியதால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அங்கிருந்த செவிலியர்கள், அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் பெண்ட்லண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கும் வேப்பங்குப்பம் பகுதி 108 ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து வந்து பிரியாவை ஏற்றிக் கொண்டு வேலூர் நோக்கிப் புறப்பட்டது. வாகனத்தை ஓட்டுநர் பரந்தாமன் ஓட்டினார்.
ஆம்புலன்ஸ் வேலூர் விமான நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பிரியாவுக்கு பிரசவ வலி கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. மருத்துவமனைக்குச் செல்ல இன்னும் நேரம் எடுக்கும் என்பதால், ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் சௌமியா, ஓடும் வாகனத்திலேயே பிரியாவுக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார்.
மருத்துவ உதவியாளரின் திறமையான செயல்பாட்டால், இரவு 9.04 மணியளவில் பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் பாதுகாப்பாக வேலூர் பெண்ட்லண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சௌமியா மற்றும் ஓட்டுநர் பரந்தாமன் ஆகியோரை பொதுமக்களும், உறவினர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.










Leave a Reply