மும்பையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த கணவனையும், அவரை காப்பாற்ற முயன்ற மனைவியையும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.


மும்பை மாலட் மேற்கு, வைனை காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகண்டன் (40). இவர் மும்பையில் உணவகம் நடத்தி வந்தார். இவரது மனைவி கலையரசி (35). இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த சிவகண்டனின் பாட்டியின் காரியம் சடங்கில் கலந்து கொள்வதற்காக, மும்பையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் செல்லும் தாதர் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதிகாலை சுமார் 4:00 மணியளவில் ரயில் ஆரணி சாலை மற்றும் போளூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் முன்பக்க பொதுப் பெட்டியில் (General Coach) படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்த சிவகண்டன், எதிர்பாராதவிதமாக ஓடும் ரயிலில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
காப்பாற்ற முயன்ற போது நேர்ந்த விபத்து:
கண் இமைக்கும் நேரத்தில் கணவர் கீழே விழுவதைக் கண்ட மனைவி கலையரசி, பதற்றத்தில் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில், இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
இந்தக் கோர விபத்தைக் கண்ட சக பயணிகள் உடனடியாக ரயிலின் அபாயச் சங்கிலியை (Chain Pull) பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் ரயிலின் Guard கொடுத்த தகவலின் பேரில், ஆரணி சாலை ரயில் நிலைய அதிகாரி காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.
காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடமைகள் மற்றும் செல்போன்கள் ரயிலிலேயே இருந்ததால், சக பயணிகள் அவர்களது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாட்டியின் காரியத்திற்காக சொந்த ஊர் திரும்பிய தம்பதியினர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










Leave a Reply