தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை: ஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் ஏமாற்றம்!

வேலூர், பிப். 2-
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உச்ச வரம்பு தொடரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது மேலும் பழைய வரிவிதிப்பு முறையில் 80சி பிரிவில் சேமிப்புக்கான கழிவுத்தொகை குறித்து அறிவிக்கப்படவில்லை இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே சேமிக்கும் பழக்கத்திற்கு எதிராக உள்ளது.  ஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது:
பாராளுமன்றத்தில்  2026-27 ஆம் நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில்  மாற்றங்கள் ஏதும் செய்யாமல் கடந்தாண்டு அறிவிக்கப்படட்ட உச்ச வரம்பு தொடரும் என மாண்புமிகு.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாத ஊதியம் பெறுவோம் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் தந்துள்ளது.
கடந்த ஆண்டு சங்கத்தின் சார்பில் நிதியமைச்சகத்திற்கு நாங்கள் சமர்பித்த கோரிக்கை மனுவில்  வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction) குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைக்க வேண்டும் என புதுதில்லியிலுள்ள நிதியமைச்சத்திற்கு சமர்பித்தோம்.  மேலும் 80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் மூன்ற இலட்சமாக உயர்த்த கோரினோம்
இந்திய பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் சேமிக்கும் பழக்கத்திற்கு முற்றிலுமாக வாய்பு மறுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு முனைமம், பிரதமரின் நிவாரண நிதி, முதலமைச்சரின் நிவாரண நிதி, அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நிதிகளுக்கு வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ளும் நடைமுறை பழைய வரி விகித முறையில் உள்ளது.  ஆனால் இந்த முறை புதிய வரி முறையில் இல்லாததால் சேமிக்கும் பழக்கம் எதிராக உள்ளது.  புதிய வரி முறையிலும் 80சி, 80டி, 80ஜி போன்ற பிரிவுகள் தொடர வேண்டும்.
வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீள பெறுதல் ஆகியவை மேற்கொள்ளும் செலவினங்களுக்காக தரப்படும் படி ஆகையால் இதனை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டுகின்றோம்.
80C பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் 1.5 இலட்சத்திலிருந்து ரூபாய் மூன்று இலட்சமாக உயர்த்த வேண்டும்.
இந்திய மொத்த வருவாயில்(GDP)  6 சதவிகிதமும் மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவிகிதமும் பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட கோருகின்றோம்.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.
மேலும் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து பெங்களுர், ஹைதராபாத் போன்ற  நகரங்களுக்கு அதிவேக ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது .அதே நேரத்தில் திருப்பதியிலிருந்து காட்பாடி வழியாக விழுப்புரம் வரை இரட்டை இரயில் பாதை அமைக்க வேண்டும், வேலூரில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ள விமான நிலையம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.