அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 25.01.2026 தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (23.01.2026) ஏற்றுக்கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டு 25.01.2026 அன்று தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழியான “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.” என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, வாசிக்க அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.