கல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம் – வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை!
குடியாத்தம், அக்.12-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கிரி பிரசாத் (17), தருண் (17) ஆகிய இருவரும் காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை இருவரும் நண்பரின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காந்திநகர் அருகே எதிரே வந்த பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட இரு மாணவர்களும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு மாணவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றொரு மாணவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர்களின் வயது குறித்தும் கேள்வி.
இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஓட்டுநர்களில் சிலர் 60 வயதைக் கடந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களின் உடல்நிலை, பார்வைத்திறன் மற்றும் வாகனம் ஓட்டுவதற்கான தகுதி ஆகியவை முறையாகப் பரிசோதிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் தகுதி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏற்கெனவே நடந்த மற்றொரு சம்பவம்:
குடியாத்தம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் விளையாடிய பந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தச் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த கஜா என்பவர் மீது பந்து மோதியதில் அவர் காயமடைந்ததாகத் தெரிகிறது.
தற்போது பள்ளி வாகனம் மோதி இரு கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்துள்ள சம்பவம், பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு, ஓட்டுநர்களின் தகுதி மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.














Leave a Reply