தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ஐ புறக்கணிக்க முடிவு: கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!

வேலூர், மார்ச் 28-
தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் தமிழ்நாடு முழுமைக்கும் 35 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாக கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் தங்கள் சொந்த முதலீட்டில் 5 முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்து கோழி வளர்ப்பதற்கான பண்ணைகள் அமைத்து அதற்கான மின்சார இணைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ பொருட்கள் ,கறிக்கோழி வளர்ப்புக்கான கூலி என முதலீடுகளாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள கறிக்கோழி கொள்முதல் முதலாளிகளுடன் ஒப்பந்தம் அடிப்படையில் ஒரு கிலோ 6 ரூபாய்  50காசுக்கு  வளர்த்து ஒன்றரை முதல் மூன்று கிலோ வரை 40 நாட்கள் இரவு, பகல் பாராமல் கடுமையான உழைப்பின் மூலம் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் ஏக்கர் கணக்கில் நெல் முளைத்த விவசாய நிலங்கள் இருந்தது. இன்று கல் முளைத்த மேட்டு நிலங்களாக ரியல் எஸ்டேட் அதிபர்களின் வர்ணனையால் வீட்டுமனைகளாகவும் கான்கிரீட் வீடுகளாகவும், கான்கிரீட் வீடுகளாகும் காட்சியளித்து வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டம் மூலம் விவசாயம் முழுவதும் அழிக்கப்பட்டு கூலி ஆட்கள் இல்லாமல் காலை 6 மணி முதல் 2 மணி வரை கூலி 600 என நிர்ணயித்த நிலையில் விவசாய உற்பத்தி முழுவதும் சிதைக்கப்பட்டு வாழ்வாதார இழப்பை கருத்தில் கொண்டு கறிக்கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 2011 தொடங்கி தற்போது 2025 வரை ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் எவ்வித நன்மையும் ஏற்படுத்தவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் 2011 அப்போதைய முதலமைச்சர்   ஜெயலலிதாவை  நேரடியாக தலைமை செயலகத்தில் சந்தித்து கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை மனுவாக கொடுத்து இலவச மின்சாரம், கிலோ ஒன்றுக்கு கூடுதலாக 50 பைசா தொகை ,அனைத்து தொழிலாளர்களுக்கும் நல வாரியம் உள்ள நிலையில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கும் நல வாரியம் தேவை, விபத்து காப்பீடு என்ற பெயரில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு விபத்து காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெயலலிதா அவர்களிடமும், அவருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்களையும், அதன் பின் ஸ்டாலினையும் நேரடியாக சந்தித்து மனு கொடுத்து பேசியும் இது நாள் வரையில் 50 பைசா கூலி உயர்வுக்கு கூட வழிவகை செய்யவில்லை. 35 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கையை துளி அளவு கூட பரிசீலனை செய்யாமல் கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களின்  செயலால் தற்போது நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளிவிடும் ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் சரியான பாடம் புகட்டும் வகையில் தமிழ்நாடு முழுமைக்கும் இருக்கும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி விவசாயிகள் குடும்பத்தின் சார்பாக  வாக்குரிமை எங்கள் உரிமை எங்கள் உரிமைக்கும் வாழ்வாதார வளர்ச்சிக்கும் கடந்த 15 ஆண்டுகளாக சிந்திக்காத அரசியல்வாதிகளுக்கு எதிராக எங்களது ஒட்டுமொத்த குரல் ஒரே வகையில் ஒலிக்கும் எனவும் அது 2026  தேர்தலை புறக்கணிப்பதே என்பதே ஆகும் எனவும் கூறினர். பல்லாயிரம் கோடியை  நலத்திட்டங்களுக்கு செலவிடும்  அரசானது கறிக்கோழி கொள்முதல் செய்து ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி வருவாய் பார்க்கும் முதலாளிகளை  அழைத்து பேசி எங்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியமாக தற்போது வழங்கப்படும் 6 ரூபாய் 50 காசுகளை 50 காசுகள் கூடுதலாக உயர்த்தி ஏழு ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யாத ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் எதிர்வினையாகவே எங்களது தேர்தல் எதிர்ப்பு நிலைப்பாடு இருக்கும் என வருத்தமான தகவலை தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் வேலூர் மாவட்டம், சேம்பள்ளி ஹரி கிருஷ்ணன் மிகுந்த மன வருத்தத்துடன் மேற்கண்ட பதிவினை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 2026  சட்டமன்ற தேர்தலில் 35 ஆயிரம் கறிக்கோழி வளர்ப்பு விவசாய குடும்பங்களின்  வாக்குரிமை என்பது குடும்பத்திற்கு 4 பேர் வீதம் என்றால் கூட 1 லட்சத்து 40 ஆயிரம் ஒட்டுகள் நேரடியாக இழக்கும் அபாயம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். தேடிவந்து கோரிய கறிக்கோழி வளர்ப்பு சங்கத்தின் நிராகரிக்கப்பட்ட கோரிக்கையை  ஆட்சிக்கு வந்த  பின் பரிசளிப்பதாக மீண்டும் ஒரு தேர்தல் வாக்குறுதி நாடகத்தை ஆளும் கட்சியும், ,ஆண்ட கட்சியும் அரங்கேற்றினால் மட்டுமே 35 ஆயிரம் கறிக்கோழி வளர்ப்பு விவசாய குடும்பங்களின்  மனநிலையில் மாற்றம் ஏற்படும். மாற்றம் ஏற்படுமா..?? அல்லது ஏமாற்றம் மிஞ்சும்மா..?? என்பது 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகே உண்மை தெளிவுபடும் .