அரியலூர் மாவட்டத்தில்தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும்தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறையினைஅரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிதேர்தல் செலவின பார்வையாளர் லட்சுமி நாராயண பொக்கா, இ.வ.ப., நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை (Control Room) மற்றும் தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை (Media Control Room) செயல்பாடுகளை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் லட்சுமி நாராயண பொக்கா, இ.வ.ப., இன்று (31.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறையினை (Media Control Room) ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதையும், அதற்கான பதிவுகள் உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், தினசரி அறிக்கைகள் அனுப்பப்படுவதன் விவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்கள் தொடர்பான புகார்கள் தெரிவிப்பதற்காக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு தற்போது வரை வரப்பெற்றுள்ள தேர்தல் தொடர்பான தொலைபேசி புகார்கள் குறித்தும், புகார்கள் பதிவு செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், கட்டுபாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும்படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆர்.எஸ் கருவி செயல்பாடுகள் குறித்து கணினியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் திரு.லட்சுமி நாராயண பொக்கா, இ.வ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.