வேலூர்,பிப்.14-
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் வழிபட்டனர்.
பழைய காட்பாடி பெருமாள் கோயில் வீதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இந்த வருடத்தின் முதல் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடந்தது. குறிப்பாக விஷ்ணுவின் அருளை பெறக்கூடிய பொன்னான நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இது ஒவ்வொரு வருடமும் மாசி ஒன்று, வைகாசி ஒன்று, ஆவணி ஒன்று, கார்த்திகை ஒன்று அன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது. இந்த மாசி மாதம் ஒன்றாம் தேதி அதாவது 13.2.2026 அன்று அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ணிய கால பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், பெருமாள், அம்பாள் அனைவரையும் 104 முறை வணங்கிவிட்டு கொடிமரத்திலிருந்து பிரகாரத்தை 27 முறை சுற்ற வேண்டும். அப்போது கையில் 27 வெள்ளை நிற பூக்களை வைத்துக்கொள்ள வேண்டும் .ஒவ்வொரு முறையும் சுற்றிவரும் போது பெருமாளை வணங்கி ஒரு வெள்ளை நிற பூவை கொடி மரத்தில் வைத்துவிட்டு சுற்ற வேண்டும். இப்படி 27 முறை சுற்றி விட்டு சன்னிதானத்தில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதல்களை நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் கேட்பது அடுத்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும்போது உங்களுக்கு வேண்டிய வரம் கிடைத்து விடும் என்பது ஐதீகம். இதை பக்தர்கள் செய்யும்போது மனப்பூர்வமாக செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறப்புமிக்க இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பழைய காட்பாடியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாளை பக்தர்கள் திரண்டு வந்து அதிகாலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வழிபட்டனர். விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு கோயிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்வாறு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் ஜி. மனோகரன் வெகு விமரிசையாக செய்திருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசித்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. குறிப்பாக இந்த கோயிலில் ஸ்ரீ பத்மநிதி மற்றும் ஸ்ரீ சங்கநிதி சிலைகள் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைகள் வேறு எங்கும் கிடையாது. அதாவது குபேரனின் அங்கமாக கருதப்படும் இந்த இரு வேறு சிலைகளும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு இருபுறமும் அமைந்துள்ளது வெகு சிறப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோயிலை அறங்காவலர் குழு தலைவர் ஜி. மனோகரன் சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவதும் சிறப்பு ஆகும்.













Leave a Reply