வேலூர், நவ.24-
வேலூர் மாவட்டத்தில் வேலூரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் குறைந்தபட்ச வசதிகள் கூட நோயாளிகளுக்கு இல்லாத நிலை இருந்தது. இதனால் இந்த மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேலூர் மாநகரின் மையத்தில் பென்ட்லாண்ட் மருத்துவமனை இருந்தாலும் இங்கே பலவித வசதிகள் குறைவாகவே காணப்பட்டன. இதனை தமிழக அரசு மனதில் கொண்டு இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி ரூபாய் 410 கோடி செலவில் 24 மணி நேரமும் இயங்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றி அமைத்தது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதையடுத்து இந்த மருத்துவமனை தற்போது 24 மணி நேரமும் இயங்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் 365 நாட்களும் பணி என்று சொல்லி அலைகழிக்கப்படுவது ஏன் என்று தெரியவில்லை. இவருடன் சேர்ந்து பாதுகாவலர்கள் என சொல்லப்படும் செக்யூரிட்டிகளும் 24 மணி நேரமும் இடைவிடாது மாறி மாறி சுழற்சி முறையில் இவர்களும் ஆண்டு முழுவதும் விடுமுறை இல்லாமல் பணியாற்றுகின்ற அவல நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. விடுமுறை கேட்டால் உங்களுக்கு விடுமுறை கிடையாது என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சொல்வதாக கூறப்படுகிறது. ஆதலால் மற்றவர்களுக்கு வழங்கப்படுவது போல துப்புரவு பணியாளர்களுக்கும், செக்யூரிட்டிகளுக்கும் வார விடுமுறையை வாரந்தோறும் தவறாது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களால் திடீர் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் நிலைமை மோசம் அடைவதற்குள் அரசு மருத்துவத்துறை இதுபோன்ற கடைநிலை ஊழியர்களுக்கு வார விடுமுறையை தவறாது வழங்கி அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது, மருத்துவத்துறையின் முடிவு என்ன? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











Leave a Reply