சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில்  ரூ.10 அடாவடியாக வசூல் செய்யும் கட்டண கழிவறை: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

திருவண்ணாமலை,நவ.30-
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கட்டண கழிப்பறையில் பொதுமக்கள் மற்றும் பேருந்தில் வேலை செய்யும் நடத்துனர்கள், ஓட்டுநர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் என பலதரப்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேருந்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பரிசோதகர்கள் இலவசமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த கட்டண கழிப்பறையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தலா ஒரு நபருக்கு சிறுநீர் கழிக்க ரூபாய் பத்தும், மலம் கழிக்க ரூபாய் 15-ம் அடாவடியாக வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக உள்ள தர்ப்பகராஜ் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பாரா? என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கட்டாயம் ஆகிறது. பொதுமக்கள் அன்றாடம் பாதிக்கப்படும்  இது போன்ற பிரச்சனைகளில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.