பாபரி மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஐ ‘பாசிச எதிர்ப்பு தினம்’ ஆக அனுசரித்து, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமைகளைக் காக்க வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியி்ன் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்தீக், தந்தை பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கு. ராமகிருட்டிணன், எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக அணி மாநிலச் செயலாளர் அப்துல் கரீம் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் பேசிய எஸ்டிபிஐ மாநிலப் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்தீக் பேசுகையில், “1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் நிகழ்ந்த பாபர் மசூதி தகர்ப்பு என்பது வெறும் கட்டட இடிப்பு மட்டுமல்ல; அது இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவையே தாக்கிய பயங்கரவாதச் செயலாகும். மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, வழிபாட்டு உரிமை, சட்டத்தின் ஆட்சி ஆகியவை ஒருசேரத் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த அநீதிக்கு நீதி கிடைக்கவில்லை,” என்று குற்றம் சாட்டினார்.மேலும் அவர் பேசுகையில், “ஆதாரங்களைப் புறக்கணித்து பெரும்பான்மை மனச்சாட்சி அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பால், மதவாத சக்திகள் இன்றைக்குக் கியான்வாபி, மதுரா ஷாஹி ஈத்கா, டெல்லி ஜாமா மஸ்ஜித் போன்ற பழைமையான மஸ்ஜிதுகளை இலக்காக்கி அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. மறுபுறம், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் (திருத்த) மசோதா, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் முயற்சியாக உள்ளது,” எனத் தெரிவித்தார்.
மதச்சார்பின்மை எனும் அரசியலமைப்பு உத்தரவாதம் அரித்து இல்லாமலாக்கப்படுவதாகவும், சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது இந்தியத் தேசியத்தின் அடித்தளம் என்றும் அவர் வலியுறுத்தினார். சட்டத்தின் நீதியும் அமைதி நல்லிணக்கமும் நிலைபெற, அனைவரும் ஒன்றிணைந்து வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் எந்த முயற்சியையும் எதிர்க்க வேண்டும், வக்ஃப் உரிமைகளைக் காக்க வேண்டும், மதச்சார்பின்மையை அரசியலமைப்பின் உயிர்நாடியாக மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து நூற்றுக்கணக்கான எஸ்டிபிஐ கட்சியின் வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையைக் காக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.













Leave a Reply