தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த த.வெ.க., நிர்வாகியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் உதயகுமார் பாராட்டு!

செய்யாறு, மார்ச் 20 –
செய்யாறு அருகே வங்கியின் நுழைவுவாயிலில் தவற விட்ட பணத்தை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த த.வெ.க., பொறுப்பாளருக்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் – மாவட்ட செயலாளர் உதயகுமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.‌
செய்யாறு அடுத்த
செய்யாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர், செய்யாறு சட்டசபை தொகுதியில் த.வெ.க.,வில்  இளைஞரணி இணை அமைப்பளராக இருந்து வருகிறார். இந்நிலையில் செய்யாறு – வந்தவாசியில் அத்திக்குளம் கிராம சாலை சந்திப்பில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு பத்மநாபன் சென்றார்.
அப்பொழுது அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் கீழே ஒரு கைப்பை கிடந்ததை பத்மநாபன் எடுத்து பார்த்தார். அதில்,
ரூ.7,500 இருந்தது தெரிய வந்தது.
வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களிடம் விசாரித்துப் பார்த்தார். கைப்பை குறித்து யாரும் தனது என்று சொல்லி சொந்தம் கொண்டாடி முன்வரவில்லை. உடனடியாக பத்மநாபன் அருகில் இருந்த அனக்காவூர் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் பணப்பையை ஒப்படைத்தார். சிறிது நேரத்தில், பணத்தை தவறவிட்ட முதியவர் ஒருவர் மேற்கண்ட காவல் நிலையம் வந்தார். பணப்பையை தவறவிட்டதற்கான விவரத்தையும் அந்த முதியவர், காவல் ஆய்வாளரிடம் கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன், த.வெ.க., பொறுப்பாளர் பத்மநாபன், த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செய்லாளர் உதயகுமார் ஆகியோர் முதியவரிடம் பணப்பையை ஒப்படைத்தனர்.  இன்ஸ்பெக்டர் மணிகண்டன், த.வெ.க.,வின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் சக போலீசார் பத்மநாபனின் நேர்மையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.