காட்பாடியில் எம்ஜிஆருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம்!

வேலூர், மார்ச் 9 –
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தொண்டான்துளசி பகுதியில் இறைவன் எம்ஜிஆருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 1984 ஆம் ஆண்டு காட்பாடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரகுபதி. இவரது மகன் முரளி. இவர் எம்ஜிஆர் மீது கொண்ட பற்று மற்றும் அதீத மரியாதை காரணமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தொண்டான்துளசி பகுதியில் இறைவன் எம்ஜிஆருக்கு கோயில் கட்டி அதில் ஐந்து அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன எம்ஜிஆர் சிலையை நிறுவியுள்ளார். இதன் கும்பாபிஷேகம் 8ம் தேதி காலை 9 முதல் 10:30 மணிக்குள் நடந்தது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட எம்ஜிஆர் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.