வேலூர், மார்ச் 4-
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காட்பாடி பகுதியில், ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் ஸ்ரீ கோட்டையம்மன் (எ) ரேணுகாம்பாள் ஆலயத்தின் 76-ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 5-ஆம் தேதி அன்று எருது விடும் திருவிழா நடைபெற உள்ளது.
இதனையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழா நடைபெறும் அன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
வரும் 05.03.2026 அன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
சித்தூர் பேருந்து நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலை முற்றிலும் போக்குவரத்துக்காக தடை செய்யப்படுகிறது.
மாற்றுப் பாதை:
பிரம்மபுரம் செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங்கள் தவிர்த்து), ஓடை பிள்ளையார் கோயில் ஜங்ஷனில் வளைந்து, அக்ஸீலியம் ரவுண்டானா அருகே உள்ள புத்துக்கோயில் வளைவு வழியாக வி.ஜி.ராவ் நகர் சென்று பிரம்மபுரம் காவல் நிலைய ஜங்ஷனை அடையலாம். திரும்ப வரும் வாகனங்களும் இதே பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சித்தூர் – திருவலம் மார்க்கம்:
சித்தூரில் இருந்து திருவலம் செல்லும் வாகனங்கள், காட்பாடி – வள்ளிமலை சாலையில் வளைந்து பள்ளிக்குப்பம் மற்றும் சேர்க்காடு வழியாக திருவலம் செல்லலாம்.
இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.











Leave a Reply