வேலூர்,நவ.20-
வேலூர் மாவட்டத்தில் அருகருகே அமைந்து, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய இரு ரிசர்வ் தொகுதிகளில் திமுகவினர் 2026 சட்டமன்ற தேர்தலின் முன்னோட்டமான பணிகளில் உற்சாகமாய் களம் இறங்கிவிட்டனர். இரு தொகுதிகளிலும் போட்டியிட திமுக பிரமுகர்கள் அண்ணா அறிவாலயத்தையும், திமுக தலைவர்களையும் சுற்றி சுற்றி வருகின்றனர். வேலூர் மாவட்ட திமுக இரண்டாக பிரிக்கப்பட்டு, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தனி தொகுதிகளுக்கு ஏ.பி.நந்தகுமாரை மாவட்ட கழக செயலாளராகவும், காட்பாடி, கே.வி.குப்பம் தனி தொகுதிகளுக்கு எம்.பி. கதிர் ஆனந்தை மாவட்ட கழக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வரும் ,கழக தலைவருமான மு.க.ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு நியமித்ததால், திமுகவினரும் உற்சாகமாய் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். துரைமுருகன் செல்வாக்கு படைத்த இரு தொகுதிகளில் கதிர் ஆனந்தும், ஏ.பி.என். செல்வாக்கு உள்ள தொகுதிகளில் அவரே மாவட்ட செயலாளராகவும் உள்ளதால் பிரச்சனைகளோ, எதிர்ப்புகளோ எழவில்லை. இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை உற்சாகமாய் இப்போதே களம் இறங்கி கொண்டாட தொடங்கிவிட்டனர். எஸ்.ஐ.ஆர். பணிகளிலும் திமுகவினர் களம் இறங்கிவிட்டனர். இதுஇப்படியிருக்க, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில் போட்டியிட திமுகவினர் உற்சாகமாய் ஆர்வம் காட்டிவருகின்றனர். குடியாத்தம் சிட்டிங் எம்எல்ஏ அமலு விஜயன் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார். இவருக்கு ஏ.பி.என். ஆதரவு கரம் நீட்டாவிட்டால், 2016-இல் அமலு தான் போட்டியிட்டு தோற்ற கே.வி.குப்பம் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் தயவில் சீட் வாங்கிவிட பிளான் போட்டு வருகிறார். குடியாத்தம் மாஜி எம்எல்ஏவும், மாவட்ட திமுக மகளிரணி தலைவருமான ஜெயந்தி பத்மநாதன் இர்ண்டில் ஒன்றை பெற்றுவிட அண்ணா அறிவாலயத்தையும், தலைமைக்கழக நிர்வாகிகளையும், மாவட்டத்தையும் சுற்றி சுற்றி வருகிறார். வேலூர் மாவட்ட தனி நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பாண்டியன் பள்ளிப் பருவத்தில் இருந்தே நாற்பது ஆண்டு கழகப் பணி, குடியாத்தத்தில் 2016-இல் கலைஞர் படிப்பம் அமைத்தது, தமிழ் இலக்கிய பணி போன்றவற்றை கூறி, திருக்குறளில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டி ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று தலைவர்களிடம் கேட்டு, தொகுதி முழுக்க நிகழ்ச்சிகளில் சுற்றி சுற்றி வருகிறார். தனியார் பள்ளி முதல்வரும் திமுக மாவட்ட துணை செயலாளருமான பிரபாத்குமாரும் வாய்ப்புக்காக கடும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார். குடியாத்தம் தொகுதியில் 2011. 2016-ஆம் ஆண்டுகளில்இரு முறை போட்டியிட்டு தோற்ற இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன் மூன்றாவது முறையாக வாய்ப்பு கிடைக்குமா என்று சின்னவரின் தயவை எதிர்நோக்குகிறார். கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு செய்த உதவிகளை செய்த கவுன்சிலர் ம.மனோஜ் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று வழி மேல் விழி வைத்துள்ளார். முந்தைய பேர்ணாம்பட்டு தொகுதியில் ஆசிரியர்-அரசு ஊழியர் பிரதிநிதிகளான ஆசிரியர் கோவிந்தன், சின்னசாமி ஆகியோருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்றும் திருப்பத்தூர் தொகுதியில் ஆசிரியர் அரசுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் இதேபோல், அரசு ஊழியர்- ஆசிரியர் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தலைமைக்கு கோரி ஆசிரியர் இ.ஜே.கெளதமபாண்டியன் சீட்டுக்காக போராடி வருகிறார். கடந்த இரு சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்- ஆசிரியர் சமூகத்துக்கு சீட் வழங்கவி்ல்லை என்றும் இந்த முறை தலைமைக் கழகம் வழங்கும் என்றும் தாழையாத்தம் வாத்தியார் ஜீவனும் சீட் கிடைக்குமா என்று ஆர்வத்தில் உள்ளூர் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இதேபோல், கே.வி.குப்பம் தொகுதியில் கெம்மகுப்பம் கோபி தனக்கு அமைச்சர் துரைமுருகன் ஆதரவில், வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கிறார். ஆனால், ஐ.டி.விங் ராஜாகுப்பம் முருகானந்தனோ தனக்கு ஏ.பி.என். ஆதரவுக்கரம் நீட்டுவார் என்று ஆவலுடன் இருக்கிறார். கே.வி.குப்பம் முன்னாள் சேர்மன் கே.சீதாராமன் தனக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் ஆவலில் இருக்கிறார். கே.வி.குப்பம் ஒன்றிய கவுன்சிலர் சிவகுமார் தனது மனைவிக்கு வாய்ப்பு வாங்கிடும் ஆவலில் இருக்கிறார். இவர்களோடு பலரும் சீட் கேட்டு ஆவலில் இருக்கிறார்கள். காமராஜர் போட்டியிட்ட இந்த தொகுதியில் மாஜி எம்பி செல்லகுமார், அழகிரி ஆகியோரின் ஆதரவில் காங்கிரஸ் சார்பில் சீட் வாங்கிட மாவட்ட தலைவர் ஜி.சுரேஷ்குமார் துடியாய் துடிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் சாதகமான தொகுதி என்று கேட்கிறது. போதாக்குறைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசுவும் தொகுதியில் வலம் வருகிறார். ஆனாலும், இரு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என்று அந்த கட்சியினர் அடித்து கூறுகின்றனர். கே.வி.குப்பம் தொகுதி உருவானது முதல் 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை திமுக வசமாக்கிவிட மாவட்ட செயலாளர் கதிர் ஆனந்த் முனைப்போடு தொகுதியில் வலம் வருகிறார். அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பம் அடங்கிய கே.வி.குப்பத்தில் திமுக கொடி பறக்கவிட்டுவிட வேண்டும் என்ற ஆவல் திமுகவினரிடையே இருக்கிறது. செங்கோட்டையில் பறந்த முதல் தேசிய கொடியை நெய்த குடியாத்தத்தில் திமுக கொடியே பறக்கும் என்றும் திமுகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.











Leave a Reply