வேலூர், நவ. 9-
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மழைக்காலம் முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட சாலைகள் செப்பனிடப்படும். காட்பாடியிலிருந்து 7 கி. மீ., திருப்பதிக்குச் செல்லும் புறவழிச் சாலையை இணைக்க ரூ.100 கோடி செலவில் புதிய சுற்றுச்சாலை அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே கெங்கநல்லூரில் அப்துல்லாபுரம் முதல் ஆசனாம்பட்டு வரையிலும், அதே போல் ஆலங்காயம் முதல் திருப்பத்தூர் வரையில் இருவழிச் சாலையை 4 வழிச் சாலைகளாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கு தலா 8 கி.மீ., ரூ.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அமுலு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில்: தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் திராவிட மாடல் ஆட்சி என பெயரிட்டார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது இலக்கு.
தமிழ்நாட்டின் விவசாய பெருங்குடி மக்கள் பொருட்களை சந்தைப்படுத்த சாலை அவசியம். அரசின் மூலதனம் நெடுஞ்சாலைத்துறை. அதற்கு முக்கியத்துவம் தந்து பல பணிகள் நடக்கிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 276 கிலோ மீட்டர் சாலையை விரிவுப்படுத்துவது, உறுதிப்படுத்தும் அடிப்படையில் ரூ.475 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் சாலையை விரிவுப்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் சாலையை பராமரிப்பு செய்ய, விரிவுபடுத்த இம்மாவட்டத்தில் ரூ.600 கோடி செலவு செய்துள்ளோம்.
தமிழகத்தில் தரைப்பாலங்கள் 1281. அதனை உயர்மட்டபாலங்களாக உயர்த்தும் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 12 மேம்பாலங்கள் அமைக்க செலவும் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாள் கோரிக்கையான பொன்னை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. காங்கேயநல்லூரிலும் பாலம் கட்டி கொண்டிருக்கிறோம். விரைவில் அதனை திறக்க உள்ளோம்.
இம்மாவட்டத்தில் ரூ.200 கோடி திட்டத்தில் ஐந்து மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில் மூன்று முடிந்து 2 ரயில்வே மேம்பால பணிகள் நடந்து கொண்டுள்ளது.
முதல்வர் அறிவித்த திட்டத்தின் படி இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக ஆக்குகிறோம். வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ரூ.48 கோடியில் சாலைகளை விரிவாக்கம் செய்துள்ளோம்.
இன்று அப்துல்லாபுரம் ஆசனாம்பட்டு வரையில் ரூ.50 கோடியில் 4 வழிச் சாலையாக விரிவாக்கப்படும். வேலூரில் புறவழிச் சாலை வேண்டுமென சட்டமன்றத்தில் பேசினார்கள்.
அதற்கு முக்கியத்துவம் தந்து விழுப்புரம் சாலையுடன் லத்தேரியில் இணைப்பு சாலை போடப்படும். தென் பகுதியிலிருந்து திருப்பதி செல்லும் ஆன்மிக பக்தர்களுக்காக அவர்கள் வேலூரை தாண்டிச் செல்லும் போது காட்பாடி வழியாகச் செல்ல வேண்டும். அதற்கு புறவழிச் சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர்.
அதற்காக காட்பாடி சித்தூர் சாலையிலிருந்து, ராணிப்பேட்டை – கிருஷ்ணகிரி சாலையை சுற்றுச்சாலையாக இணைக்க 7 கி.மீ., தூரத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளோம்.
சாலை என்பது நாட்டின் முதுகெலும்பு, பொருளாதார முதுகெலும்பு என்பதால் நெடுஞ்சாலைத்துறைக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் பணிகள் சிறப்பாக நடக்கிறது. சாலையை விரிவாக்கம் செய்யும் போது ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்களை வைக்கிறோம்.
சென்ற ஆண்டு 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டோம்.இந்த ஆண்டும் முதல்வர் ஆணையை ஏற்று மரங்களை நடுவோம். நெடுஞ்சாலைத்துறை மரங்களை நடவும் முக்கியத்துவம் தருகிறோம்.
பள்ளிகொண்டா புறவழிச் சாலை ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலையும் விரைவில் போடப்படும்.
மத்திய அரசிடம் பல ஆயிரம் கோடி புயல் நிதி கேட்டு, கடிதம் எழுதினோம், வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் நிதியை ஒதுக்கி கொடுக்கவில்லை.
வருங்காலங்களில் புயல் வந்து சாலைகள் பழுதானால் மத்திய அரசிடம் கேட்போம். ஆனாலும் மாநில நிதியை வைத்து சாலைகளை செப்பனிடுவோம்.
மழை முடிந்தவுடன் முதல்வர் பணம் ஒதுக்குவார். நாங்கள் சாலையை போடுவோம். ஏற்கனவே சென்ற ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலங்களை அறிவித்தனர். ஆனால் அவர்கள் அதற்காக சர்வீஸ் சாலைக்கு கூட நிலம் எடுக்கவில்லை.
இப்போது திமுக ஆட்சியில் 36 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவைகளை கட்டிக்கொண்டு இருக்கிறோம்.
சாலை பராமரிப்பு வருடா வருடம் நடந்து வருகிறது. அதற்கு நிதி ஒதுக்கப்படும்.
வெளிப்படை தன்மையுடன் டெண்டர் விடுகிறோம். அதற்கு தனி அதிகாரியை போட்டு செலவு முறையாக நடக்கிறதா? என்று ஆய்வு செய்கிறோம். பணிகள் முறையாக நடக்கிறது.
புதிய சுங்கச்சாவடி தொடங்குவது குறித்து ஒன்றிய அரசுதான் சொல்ல வேண்டும். அது கூடாது என நான் பலமுறை கடிதம் எழுதிவிட்டேன். ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.











Leave a Reply