வேலூர் மாநகராட்சி 17 வது வார்டு பகுதியில் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம்  வீசும் அவலம்: பாஜக பிரமுகர் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு!

வேலூர், நவ. 9-
வேலூர் மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு, மாவட்ட அமைப்பாளர் ஏபிடிஓ (ஓய்வு) சா. மதியழகன், வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
வேலூர் மாநகராட்சி வார்டு நம்பர் 17 பாலாற்றுக்கு செல்லும் சாலையில் மாநகராட்சி குப்பைகள் கொட்டுவது தொடர்கிறது. கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் மதியழகன்.
பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலை சேண்பாக்கம் சர்வீஸ் சாலை கடைசியில் ரயில்வே லைன் அருகில் வடக்கு தெற்காக பாலாற்றுக்கும் கன்சால்பேட்டைக்கும் இடையே சாலையில் வேலூர் மாநகராட்சியின் குப்பைகள்  எடுத்துச் செல்லும் லாரிகள், வண்டிகள் இந்த சாலைக்குச் சென்று குப்பைகளை கொட்டி விட்டுச் சென்று விடுகிறார்கள். இதனால் கன்சால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், மாணவிகள், பெரியோர்கள், வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்த குப்பையோடு குப்பையாக இறந்த கன்றுகுட்டிகள், நாய்கள் உள்ளிட்ட பல்வேறு அழுகிய நிலையில் உள்ள விலங்குகளின் உடல்களை அப்படியே கொண்டு வந்து திறந்தவெளியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் காற்று மாசு ஏற்பட்டு மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக இது மாறி வருவது குறிப்பிடத்தக்கது. இது முற்றிலும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  இருசக்கர வாகனங்களில் இந்தப் பகுதிக்கு வருபவர்கள் கீழே விழ  வேண்டி உள்ளது. இப்போது மழைக்காலம் என்பதால் மலேரியா, டெங்கு, ஃப்ளூ காய்ச்சல், விஷக்காய்ச்சல்கள் பரவி வரும் காலமாக உள்ளது. இதை முன்னிட்டு மாநகராட்சி மேற்பார்வையாளர்கள் குப்பை அள்ளும் லாரி ஓட்டுநர்கள் மீண்டும் அதே பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க இவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும். கொட்டிய குப்பைகளை உடனடியாக வாரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாநகராட்சி ஆணையரை கேட்டுக்கொண்டுள்ளார் மதியழகன். மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.