வேலூர் போலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்து சென்று போதை கும்பல் தலைவனை கைது செய்து அசத்தல்!

வேலூர், நவ.7-
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் போலீசார் கடந்த மாதம் போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக 13 பேரை கைது செய்தனர். இதையடுத்து இவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு இளைஞர் போதை மாத்திரைகளை இந்த 13 பேருக்கும் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்து சென்றனர் .அங்கு போதை மாத்திரைகள சப்ளை செய்து வந்த போதை கும்பல் தலைவன் பிரதாப் சவுத்ரி (36) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து வேலூருக்கு அழைத்து வந்தனர். மேலும் அவரிடமிருந்து அப்போது 11 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது அவரிடம் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.