தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு: மாநில பொதுச்செயலாளர் ராஜா அறிவிப்பு!

வேலூர்,நவ. 4-
தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத்திருத்தத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், அதனை முழுமையாக கைவிடக் கோரி நவம்பர் 2வது வாரத்தில் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்- வேலூரில் மாநில பொதுச்செயலாளர் ராஜா பேட்டியளித்தார்.
   வேலூரில் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டம் மாநில தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ராஜா, முன்னாள் மாநில துணைத் தலைவர் இளங்கோ மற்றும் முன்னாள் நிர்வாகிகள் குமார், பிரதாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில்  தனியார் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக்க சட்டதிருத்த மசோதா 2025 சமூக அநீதி என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
   தமிழகத்தில் உள்ள 163 தனியார் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு அரசு சட்டதிருத்த மசோதா கொண்டு வந்தது. இதனை எதிர்க்கும் வண்ணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
  பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
  அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும் இந்த தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் 69 சதவிகித இட ஒதுக்கீடு முற்றிலும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
இதனால் சமூக அநீதி நிலை உருவாகும். பணிபாதுகாப்பு ஆசிரியர்களுக்கு இல்லாமல் போகும். அத்துடன் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலையை உருவாக்கிவிடும்.
  அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கல்வித்துறை முற்றிலும் தனியார் மயமாகிவிடும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு முழுமையாக சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படும்.
  எனவே இந்த தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தினை தமிழக அரசு முழுமையாக கைவிடக் கோரியும், நவம்பர் 2வது வாரம் சென்னையில் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநில பொதுச்செயலாளர் குறிப்பாக தெரிவித்துள்ளார்.