காட்பாடி சன்பீம் பள்ளிகளின் பவள விழா: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்பு!

வேலூரில் காந்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சன்பீம் பள்ளிகளின் பவள விழா நடந்தது. சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரி கோபாலன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் தங்கப்பிரகாஷ், துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி கேசில்டா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கலந்துகொண்டு பவள விழா சின்னத்தை அறிமுகம் செய்து ரூபாய் 60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய புட்சால் மைதானத்தை தனது திருக்கரங்களால் திறந்து வைத்தார். மேலும் பள்ளியில் கட்டப்பட உள்ள 15,000 சதுர அடி உள் விளையாட்டு அரங்கத்தின் அடிக்கல் நாட்டியும், குடியாத்தம் நகரில் புதியதாக உருவாகும் சன்பீம் லெகசி சிபிஎஸ்சி பள்ளியின் அடிக்கற்களையும் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரி கோபாலன் பேசுகையில்: 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐஐடி பட்டதாரிகளான எனது நண்பர்களுடன் சன்பீம் டியூஷன் சென்டராக தொடங்கப்பட்டது. முதலில் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்தோம். இந்த சூழ்நிலையில் எனது நண்பர்கள் இதிலிருந்து விலகிய நிலையில் எனது துணைவியாரும், நானும் பிரச்சனைகளை கையாள கற்றுக் கொண்டோம். எனது துணைவியார் இந்த பள்ளிக்காக தனது அரசு பணியினை துறந்து பள்ளியில் எங்களுக்கு உறுதுணையாக நின்றார். மேலும் இந்த நேரத்தில் வேலூர் மக்களுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். பலர் பற்பல உதவிகளை செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு துணை நின்றார்கள். அவர்களுக்கு இந்த பவள விழா கொண்டாட்டத்தில் நன்றி கூறுவதற்காகவே ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதில் 200க்கும் மேற்பட்டவர்களை அழைத்து அவர்களுக்கு பரிசுகளையும், நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசுகையில்: மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை கிடையாது. சந்தோஷமாக இருக்க வேண்டும். மாணவர்கள் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி கொடுப்பவர்கள் சிறந்த ஆசிரியர் இல்லை. சமூகத்தில் நல்ல மாணவர்களை உருவாக்குபவரே சிறந்த ஆசிரியர். ஆசிரியர் பணி அரிய பணி, அதற்கு ஈடான பணி எதுவும் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அவை உங்களை பயன்படுத்துவது போல் வைத்துக் கொள்ளாதீர்கள். மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும். இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.
இந்த விழாவில் இந்த ஆண்டு 32 மருத்துவக் கல்விகளுக்கு தேர்ச்சி பெற்ற மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 42 சன்பீம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விருதுகள் வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் பள்ளியின் 35 ஆண்டு கால நிகழ்வுகளின் தொகுப்பு திரையிடப்பட்டது. முடிவில் மாணவன் பஸிலத் ஜஹான் இன்றைக்கு கூறினார்.