கரிகிரி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை அனைவரும் புறக்கணிப்பு செய்ததால் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரிகிரியில் வழக்கம் போல் கிராம சபை கூட்டம் நடப்பதாக இரண்டு நாட்கள் ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பை ஏற்று கிராம பொதுமக்கள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. அதேபோன்று கிராம சபை கூட்டத்தில் தலைமை தாங்க வேண்டிய ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன் மற்றும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என யாவரும் கலந்து கொள்ளவில்லை. ஊராட்சி செயலர் பொறுப்பு வகிக்கும் சேவூர் ஊராட்சி செயலர் இந்த பகுதியில் ஓடோடி கொண்டிருந்தார். ஆனால் யாரும் கூட்டம் நடத்த இசைவு தெரிவிக்கவில்லை. இதனால் அந்தக் கூட்டம் நடைபெறாமல் அப்படியே ஸ்தம்பித்து காணப்பட்டது. இதற்கிடையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் மூதாட்டிகள் வந்து தங்களது குறைகளை கொட்டி தீர்த்தனர். சரியாக சம்பளம் வழங்குவதில்லை, வாய்க்கால் வரப்பில் புல் பூண்டுகளை புடுங்க வேண்டும் என்று தங்களுக்கு பணி வழங்குவதாகவும், 100 ரூபாய் கூலி தருவதாகவும் சரமாரியாக குறைகளை அள்ளி வீசினர். இதையடுத்து அந்த சாலையில் நடந்து செல்வோர் போவோர் என அனைவரிடமும் ஊராட்சி செயலர் அந்த மினிட் புத்தகத்தில் கையொப்பம் மற்றும் இடுங்கள் இடுங்கள் என்று கெஞ்சி கெஞ்சி கையொப்பத்தை நிரப்பி கொண்டு இருந்தார். இந்நிலையில் கண்டிப்பேடு கிராம நிர்வாக அலுவலர் நளினி கரிகிரிக்கு  வந்தார். அவரும் அந்த நோட்டு புத்தகத்தில் கையெழுத்து போட்டு விட்டு சென்றார். இப்படி கரிகிரியில் கந்த கோலமாக கிராம சபை கூட்டம் நடந்ததாக ஜோடனை செய்து கொண்டிருந்தார் ஊராட்சி செயலர் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. ஊராட்சி தலைவர் உட்பட பொதுமக்கள் வரை அனைவரும் இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என்பது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது. காட்பாடி பீடிஓ அலுவலகத்தில் இருந்து ஒருவர் கூட இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடந்த கிராம சபை கூட்டத்தின் போதும் இதே நிலை நீடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என யாவரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால் இந்த ஊராட்சியை கலைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் வகையில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்குமா? அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்குமா? மாவட்ட நிர்வாகம் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.