வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாய் அடைப்பு: வீடுகளில் தஞ்சம் புகுந்த மழை நீர்- அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு ஆறுதல்!

வேலூர் மாநகராட்சி, 17வது வார்டு, 4வது மண்டலம்,
மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாய் காந்திநகர், கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் பை பாஸ் ரோடு வழியாக செல்கிறது. இந்நிலையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் தடையின்றி செல்ல முடியாமல் தூர்ந்து போய் உள்ளது. மழை தொடங்குவதற்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் தூர்வாராமல் பணியை கிடப்பில் போட்டதால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாய்க்கு அருகில் இருக்கும் சுமார் 300 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை சுற்றியும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் இந்தப்பகுதி மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி நிர்வாகமோ பாராமுகமாக உள்ளது. வேலூர் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மக்களை வஞ்சித்து வருகிறது.


இது குறித்து தகவலறிந்த வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். ஆர். கே.அப்பு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அத்துடன் தொடர்புடைய மாநகராட்சி அலுவலர்களை அழைத்து உடனடியாக இந்த பகுதியில் மழை நீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட செயலாளருடன், 17வது அதிமுக வட்ட செயலாளர், முன்னாள் கவுன்சிலர் ஏ.பிச்சமுத்து, பகுதி செயலாளர்கள விபிஎம். குமார்,
வெங்கட்ராமன், மணிமாறன், பி. சிவாஜி, சதாசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.