காட்பாடியில் 7 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை!

வேலூர், அக். 8-
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள ஜாப்ராபேட்டை வெள்ளக்கால்வாய் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன் – சாந்தம்மாள் தம்பதியர் வீட்டில் நேற்று இரவு முகமூடிகள் அணிந்தவாறு ஐந்து பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த அவர்களுடைய 7 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
அத்துடன் அந்த மர்ம கும்பல், அவர்களின் 7 வயது பேரன் ரவியை கொலை செய்வதாக மிரட்டி, முருகேசன் மற்றும் சாந்தம்மாளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் ஊர் மக்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முருகேசன் அளித்த தகவலின் அடிப்படையில், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் என்ற நபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போலீசார் பெருமாளை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தை காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் டோரா போலீசார் மோப்ப நாய் அணியுடன் வந்து தீவிர புலனாய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஜாப்ராபேட்டை கிராம பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.