70 வயது மூதாட்டி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடந்த  3 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை!

வேலூர்,டிச.8-
70 வயது மூதாட்டி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்படும் காவல்துறையின் செயல்பாடு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
வேலூர் மாவட்டம், வேலூர் பிஷப் டேவிட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபிராம். இவரது மனைவி சின்னம்மாள்(71).  இவர் வீட்டில் பாத்திரங்கள் மற்றும் துணி துவைத்து ஜீவனம் நடத்தி வருகிறார்.  இந்நிலையில் உடல் உழைப்பு தொழிலாளியான சின்னம்மாள் மீது கடந்த 24. 1. 2022 அன்று அதிகாலை 5.15 மணிக்கு வேலூர் ஆபீஸர்ஸ் லைனில் உள்ள பேபி ஹோட்டல் எதிரில் டீ குடிக்கச்  சென்றவரை வழிமறித்து முன்விரோதம் தொடர்பாக கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கிருஷ்ணமூர்த்தி, அன்பு, ராஜி, அமுல்ராஜ், கோட்டி(எ)கோவேந்தன்  உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் விறகு கட்டைகள் மற்றும் இரும்பு ராடுகளால் சரமாரியாக தாக்கினர். இதில் சின்னம்மாளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது .இதையடுத்து அவரை சாலையோரம் வீசிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து சுயநினைவு இன்றி கிடந்த சின்னம்மாளை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 9 தையல் போடப்பட்டது. இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் சின்னம்மாள் புகார் கொடுத்தார். இந்த புகார் கடந்த 3 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படாமல் அப்படியே கிடப்பில் உள்ளது. சின்னம்மாளை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர்களை கைது செய்யவில்லை. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக சிஎஸ்ஆர் பதிவு செய்து கையில் கொடுத்துவிட்டு அவர்கள் நமக்கு என்ன என்று வேலையை பார்த்துக் கொண்டு சென்று விடுகின்றனர். இதற்கெல்லாம் அடித்தளமாக விளங்குவது கையூட்டு. வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு சின்னம்மாள் தாக்கப்பட்டது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சின்னம்மாள் தனக்கு நியாயம் வேண்டி செல்லாத இடமில்லை. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் கொடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக முன்பிருந்த மதிவாணனை சந்தித்து கடந்த ஆண்டு செப்.4ம் தேதி புகார் கொடுத்தார். இந்த புகார் மனுவும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடுக்கப்படும் புகார் மனுக்கள் கிடப்பில் போடப்படுவது வேலூரில்தான் அதிகமே தவிர வேறு எந்த மாவட்டத்திலும் இருக்காது என்பதை அடித்து கூறலாம். அந்த அளவிற்கு வேலூர் மாவட்ட போலீஸார் மிகவும் தெனாவெட்டாகவும், சட்டத்தை மதிக்காமலும், தான்தோன்றித்தனமாகவும்,உயர் அதிகாரிகளை மதிக்காமலும் செயல்படுகின்றனர். குறிப்பாக உயர் அதிகாரிகளை காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் முதல் கடை நிலை அதாவது கிரேடு 2 போலீசார் வரை மதிப்பதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு ஒரு உதாரணம்தான் இந்த சின்னம்மாள் வழக்கு. புகார் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது . அதேபோன்று கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ,பதிலும் தராமல் அமைதியாக இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழைகளுக்கு குறிப்பாக நியாயம் கிடைக்காது என்பது ஒரு புறம் இருக்க இது போன்ற பல வழக்குகளை உதாரணமாக கூற முடியும். காவல்துறை உங்கள் நண்பன் என்று பெயரளவில் மட்டுமே சொல்லலாம். ஆனால் செயல்பாடு என்பது கிடையவே கிடையாது. இவரை பார்த்தாலே எறிந்து விழுகின்றனர் .வெளியே போ என்று இவரை விரட்டி அடிப்பதிலேயே போலீசார் குறியாக இருக்கின்றனர். அதாவது நாயை விட கேவலமாக நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணர்ந்து தற்போதுள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் வேலூர் சரக டிஐஜி  ஆகியோர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை பாதிக்கப்பட்டவருக்கு இதுநாள் வரை தெரிவிக்காமல் மௌனம் காக்கின்றனர். இல்லை இறுதியாக ஒரே பதிலை இவருக்கு சொல்லி அனுப்பி விடலாம். நாங்கள் நீ கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம். இனி இங்கு வராதே என்று சொல்லிவிட்டால் அவர் காவல்துறையின் லட்சணத்தை புரிந்து கொண்டு இனி அவர் பல்வேறு அலுவலகங்களுக்கு செல்வதை அவர் நிறுத்திக் கொண்டு அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று சென்று விடுவார். அப்படி ஒரு பதில் சொல்வதற்கு கூட இவர்களால் இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்காது என்பது தெள்ளத் தெளிவாக உறுதியாக இன்று நம்பும்படி ஆகியுள்ளது என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது. இதற்கு காவல்துறை தலைவர் (பொறுப்பு)  என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.