விஐடி பல்கலைக்கழகத்தை சூறையாடிய மாணவர்கள்!போபாலில் நடந்த கோர போராட்டம்!

வேலூர்,டிச.4-
கல்லூரி விடுதியில் மாசுபட்ட நீரால், விடுதி மாணவர்களுக்கு, மஞ்சள் காமாலை நோய் அதிகரித்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, விடுதி மாணவர்கள் பலமுறை நிர்வாகத்திற்கு எடுத்துரைத்தும், கண்டுகொள்ளாத நிர்வாகம்.
புகழ்பெற்ற விஐடி பல்கலைக்கழகத்தில் (போபால்) மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. அங்குள்ள விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் கார் உள்ளிட்டவைகளை மாணவர்கள் சூறையாடியுள்ளனர். மேலும் தீ வைத்து பலகோடி ரூபாய் அளவில் சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் அந்த வளாகத்தையே போர்களம் போல் மாற்றிவிட்டனர்.
கடந்த செவ்வாய் கிழமை அன்று நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய செய்திகள் தற்போது வெளியான நிலையில், சுகாதாரமற்ற குடி தண்ணீர் குறித்து நிர்வாகத்தினரிடம் மாணவர்கள் சொன்னதாகவும், அதற்கு மாணவர்களை பாதுகாவலர்களும், சில அதிகாரிகளும் தாக்கியதாகவும், இதனால் மாணவர்கள் ஆக்ரோஷம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு,
மத்தியப் பிரதேசத்தில் இந்தூர்-போபால் நெடுஞ்சாலையில் உள்ள செஹோர் மாவட்டத்தில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நள்ளிரவு ஏற்பட்ட போராட்டம் பெரிய அளவிலான வன்முறையாக வெடித்து மாறியது.  இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 12 ஆயிரம்  மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.
இந்நிலையில் விஐடி வளாகத்தில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  மாணவர்கள் ஆம்புலன்ஸ், பேருந்து மற்றும் கார்களுக்கு தீ வைத்தனர். மேலும் விடுதிகள், வேந்தரின் வீடு மற்றும் வளாகத்தின் பல்வேறு பகுதிகளை சேதப்படுத்தினர். இதை காவல் துறை உறுதிபடுத்தியிருக்கிறது.
நவம்பர் 26, 2025 அன்று விஐடி பல்கலையில் தரமற்ற உணவு, சுகாதாரமற்ற குடிநீர் காரணமாக சிலருக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டதால், போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து மாணவர்கள் விஐடி வளாகத்தை விட்டு வெளியேறினர்.
  இந்த சூழலில், நிர்வாகம் தரப்பில் உகந்த விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதாக கருதி மாணவர்கள் ஆம்புலன்ஸ், பேருந்து மற்றும் பல கார்களுக்கு தீ வைத்தனர். மேலும் விடுதிகள், வேந்தரின் வீடு மற்றும் வளாகத்தின் பல்வேறு பகுதிகளை சேதப்படுத்தினர்.
  அருகிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினர் இரவில் வளாகத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக அஷ்டா துணைப்பிரிவு காவல் அதிகாரி ஆகாஷ் அமல்கர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“உள்ளூர் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மாணவர்களிடம் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். மாணவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது,” என்று அமல்கர் கூறினார். அப்படியிருக்க வளாகத்தில் போதுமான எண்ணிக்கையிலான காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவரின் புகாரின் அடிப்படையில், வார்டன் பிரசாந்த் குமார் பாண்டே மற்றும் ஐந்து ஊழியர்கள் மீது தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளதாக  அமல்கர் மேலும் கூறினார். பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 190(2), 296 கி, 115(2), 351(3) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   “பாண்டே மற்றும் சில பாதுகாப்பு ஊழியர்கள் சில மாணவர்களை அடிப்பது போன்ற ஒரு வீடியோவும் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்
. மேலும் விசாரணையின் அடிப்படையில் அவர்களிடம் விசாரிப்போம்,” என்று அவர் சொன்னார்.
  வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு, பல்கலைக்கழக நிர்வாகம் டிசம்பர் 8 வரை விடுமுறை அறிவித்தது. இதனால் மாணவர்கள் அவசரமாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
   இருப்பினும், விஐடி போபால் பதிவாளர் கே.கே. நாயர், வளாகத்தை காலி செய்வது கட்டாயம் அல்ல என்றும், வகுப்புகள் மட்டுமே இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும், நிலைமை இப்போது அமைதியாக உள்ளது என்றும் சொன்னார்.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் குறைந்தது 33 மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போபாலில் உள்ள சிராயு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நாயர் கூறினார்.
    மஞ்சள் காமாலை பரவல் நீர் மாசுபாட்டால் ஏற்பட்டதாக  நாயர் மறுத்தார். “எங்கள் அனைத்து நீர் விநியோகங்களும்  (ரிவர்ஸ் சவ்வூடுபரவல்) சுத்திகரிப்பான்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  மேலும் இந்த பிரச்சினை தோன்றியதிலிருந்து நாங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது சோதனைகளை நடத்தி வருகிறோம். செவ்வாயன்று, மாநில சுகாதாரத் துறையின் குழுவும் வளாகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை சேகரித்தது, முடிவுகள் திருப்திகரமாக வந்துள்ளன,” என்று அவர் கூறினார்.
மூன்று மாணவர்கள் மஞ்சள் காமாலை காரணமாக இறந்ததாகக் கூறப்படுவதை  நாயர் திட்டவட்டமாக மறுத்து, இது பல்கலைக்கழகத்திற்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரம் என்று கூறினார்.
  இது ஒருபுறம் இருக்க சில மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தரமற்ற உணவு மற்றும் தண்ணீர் குறித்து புகார் அளித்து வருவதாகவும், ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யாததால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
  “இந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் தரப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை, மேலும் மாணவர்கள் பெரும்பாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறார்கள், இது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடும்.    சில தினங்களுக்கு முன் ஒரு ஆசிரியர் முதலாம் ஆண்டு மாணவனை அடித்த பிறகு மூத்த மாணவர்கள் ஆக்ரோஷமாக இருந்தனர்,” என்று வளாகத்திற்கு வெளியே  டாக்ஸிக்காக காத்திருந்த பி.டெக் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் கூறினார்.நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் நிர்வாகம் பொய் சொல்கிறது. உண்மையில், சமீபத்திய வாரங்களில் சுமார் 200 மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று பெயர் தெரியாத நிலையில் மாணவர் கூறினார்.
வளாகத்தில் இருந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்களை சில பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கியதாகவும் கூறினார்.
நிர்வாகம் தரப்பில் மாணவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு மாணவர்கள் பல்கலைக்கழகத்தை போர்களமாக மாற்றியிருக்கிறார்கள்.
  தற்போதைக்கு அங்கு சலசலப்புகள் இல்லையென்றாலும் கூட ஏபிவிபி என்கிற சில அமைப்புகள் தரப்பிலிருந்து புகைச்சல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆக சகஜ நிலை திரும்ப சிலகாலம் பிடிக்கும்.
  இருந்தாலும் கூட இவ்வளவு பெரிய மாணவர்கள் போராட்டத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று விசாரிக்குதாம் காவல் துறை. பொறுத்திருந்து பார்ப்போம் விஐடி  விஸ்வநாதனின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? போபாலில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.