வேலூர்,டிச.1-
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கண்டிப்பேடு மருத்துவமனை வீதியில் கௌஷிக் பிரஷர் வெஸல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. முன்பகுதியில் இந்த கௌஷிக் நிறுவனமும், இதற்குப் பின்பகுதியில் பயோ லிங்க்ஸ் என்ற தனியார் நிறுவனம் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து இந்தப் பகுதியில் மண்ணில் குழி தோண்டி புதைப்பதும், எரியூட்டுவதுமாக இருந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் கிராம பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதுடன் பல அபாயகரமான (புற்றுநோய்) நோய்களால் தாக்கப்படுகின்றனர் என்று பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு துறை உள்ளிட்ட இடங்களுக்கு புகார் மனுக்களை அனுப்பியும், நேரில் சென்று புகார் தெரிவித்தும் இதுநாள் வரை அரசு அலட்சியம் காண்பிப்பதுடன் இந்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து இதை தீர்மானமாக நிறைவேற்றினர். ஆனால் அதற்குப் பிறகும் கடந்த ஒரு மாதம் கழிந்த பிறகும் அதே நிலை தொடர்வதாக கிராம பொதுமக்கள் தரப்பில் புகாராக கூறப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை இந்த பயோ லிங்க்ஸ் நிறுவனம் கொண்டு வந்து கண்டிப்பேடு பகுதியில் இந்த குறிப்பிட்ட இடத்தில் அந்த மருத்துவக் கழிவுகளை புதைப்பதும், எரியூட்டுவதுமாக இருந்து வருகின்றனர். இது நாளடைவில் பயம். நீங்கி நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளதே தவிர குறைந்த பாடில்லை என்கின்றனர் கிராம பொதுமக்கள். கிராம பொதுமக்கள் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் மக்களுக்காக அரசா? இல்லை அரசுக்காக மக்களா? என்ற கேள்வியை தற்போது முன் வைத்துள்ளனர் கண்டிப்பேடு பொதுமக்கள். ஆக மொத்தத்தில் இந்த தனியார் நிறுவனமான மருத்துவக் கழிவுகளை சேகரித்துக் கொண்டு வரும் பயோ லிங்க் நிறுவனம் மீது தமிழக அரசின் பார்வை விழுமா? அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பார்களா? இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூடி சீல் வைப்பார்களா? என்று கண்டடிப்பேடு கிராமப் பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். அவர்களது எண்ணம் ஈடேறுமா ?அல்லது அவர்களது எண்ணம் நிராசை ஆகுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











Leave a Reply