

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியின் பிசனத்தார் கிராமத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறாக அமைக்கப்பட உள்ள உயிரிய மருத்துவ சுத்திகரிப்பு (Bio-Medical Waste Treatment) ஆலையை அமைக்கக் கூடாது என அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
பிசனத்தார் கிராமத்தில் முன்மொழியப்பட்டுள்ள இந்த ஆலையைப் பற்றி உள்ளூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நலன் கருதி இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தனது முறையான கோரிக்கையை அனுப்பி வைத்திருப்பதாகவும், பொதுமக்கள் உணர்வை கருத்தில் கொண்டு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோல், இந்த விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை தமிழ்நாடு அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் பரிசீலனைக்கு எடுத்துள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
பிசனத்தார் கிராமத்தில் ஆலையை அமைப்பது சுற்றுச்சூழல், காற்று மாசு, துர்நாற்றம், நீர் மாசுபாடு, பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்களின் நலனுக்காக முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.










Leave a Reply