பேரணாம்பட்டு நகராட்சி ஆதார் பிரிவில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்!

வேலூர், நவ.30-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு  நகராட்சி அலுவலகத்தின் உள்ளே செயல்படும் ஆதார் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆதார் பதிவுக்காக வருகை தரும் வாடிக்கையாளர்களை, சகட்டுமேனிக்கு ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி திட்டி பொதுமக்களை அலைகழிக்க விடுவதாக கூறப்படுகிறது.  யார் லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஆதார் சம்பந்தப்பட்ட குறைகளை ஆதார் பதிவு செய்யும் ஊழியர்கள் தீர்த்து வைப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கிடைக்கும் லஞ்சப்பணத்தில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும், விதவிதமான உடைகளை வாங்கி அணிந்து கொள்வதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்துள்ளது. லஞ்சம் கொடுக்க மறுப்பவர்களை அடுத்த வாரம் வா, அடுத்த மாதம் வா என்று அலைகழிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இப்படித்தான் பேரணாம்பட்டு குப்பைமேடு, தரைக்காடு பகுதியைச் சேர்ந்த சலீம்பாஷா என்பவர் தங்களது இரண்டு மகள்களின் ஆதாரை பதிவு செய்யச் சென்றதாகவும் அதற்கு ஆதார் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஆதார் பதிவுக்குப் போகும் நபர்களின் பிறந்த பதிவு சான்றிதழ்களை கேட்டதாகவும், அதற்கு சலீம்பாஷா எனது அந்த இரண்டு மகள்கள் வீட்டிலேயே பிறந்தார்கள் என்றும், தனக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தால் எனது இரண்டு மகள்களின் பிறப்பை நான் பதிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். அதைக் கேட்டுக் கொண்ட ஆதார் பிரிவு ஊழியர் அப்படி என்றால் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று குழந்தைகள் வீட்டிலேயே பிறந்ததற்கான சான்றிதழை பெற்று வாருங்கள், அப்போதுதான் ஆதார் பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டுக் கொண்ட பீடி தொழிலாளியான சலீம்பாஷா கிராம நிர்வாக அலுவலராக இருந்த வடிவேலுவிடம் நேரில் சென்று தனது தேவையைப் பற்றி விளக்கி கூறியுள்ளார். அதைக் கேட்டுக் கொண்ட அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு சலீம் பாஷாவை கிட்டத்தட்ட 45 நாட்கள் அலைக்கழிக்க விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேரத்திற்கு சரியாக சாப்பிடாமல் தனது மகள்களின் ஆதார் அட்டை பதிவுக்காக நகர கிராமச் சாவடியில் தனது வேலையை எல்லாம் விட்டுவிட்டு காத்திருந்திருந்தார். இந்நிலையில் கடந்த 47 நாட்களுக்குப் பிறகு நாட்களை கடத்தி விட்டு இதற்கெல்லாம் நாங்கள் கடிதம் தர முடியாது, தரவும் கூடாது. நீங்கள் நகராட்சி துப்புரவு ஆய்வாளரை சென்று பாருங்கள் என்றும், அல்லது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியரை நேரில் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன சலீம்பாஷா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளார். இப்படியாக லஞ்சம் தருபவர்களுக்கு மட்டுமே ஆதார் பிரச்சனைகளை தீர்த்து வைத்து வருகின்றனர். லஞ்சம் தராதவர்களை வாரக்கணக்கிலோ அல்லது மாதக்கணக்கிலோ அலைகழிக்க வைக்கும் பேரணாம்பட்டு நகராட்சி ஆதார் ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கேவலமான உல்லாசமான வாழ்க்கையை வாழ்வதைவிட, வேறு  எதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  உரிய விசாரணை நடத்தி பாமர மக்களை பாடாய்படுத்தி வரும் இதுபோன்ற ஊழியர்கள் மீது துறை வாரியான கடும் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு நகராட்சி பகுதிவாழ் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. வேலூர் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுக்கிறது? பொதுமக்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.